கோவை, செப். 27: கோவை மாவட்டத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுத பூஜை தொடர் விடுமுறையொட்டி சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் அக்டோபர் 1-ம் தேதி ஆயுத பூஜை, 2-ம் தேதி காந்திஜெயந்தி, விஜயதசமி கொண்டாடப்பட இருப்பதால் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இதனால், பஸ் நிலையங்களில் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கோவையில் இருந்து சேலம், ஈரோடு, நீலகிரி, திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, காந்திபுரம் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து இன்றும், நாளையும் இரண்டு நாட்களும் மற்றும் 30-ம் தேதியும் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 110 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கூட்டம் அதிகமாக காணப்பட்டால் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.