பெ.நா.பாளையம், அக்.24: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நேற்று மதியம் பள்ளி சீருடையுடன் 8 வயது மதிக்கத்தக்க பெண் சிறுமி ஒன்று தனியாக நின்று கொண்டிருந்தது. நீண்ட நேரம் இருந்த குழந்தையை பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமியிடம் பேசியபோது தமிழ் தெரியாமல் இந்தியில் பேசியதால் முழு விவரம் தெரியவில்லை. பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பொதுமக்கள், குழந்தையை ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்ததில், சிறுமியின் பெயர் சிருஷ்டிகுமார் என்பதும் தந்தை ராம்சன், தாய் ரீனா தேவி என்பது மட்டும் தெரிய வந்தது. தற்போது சிறுமி போலீசாரின் பராமரிப்பில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமி குறித்து தகவல் தெரிந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தை அணுகுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
