கோவை, ஆக.22: கோவை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது. இதில், தற்போது வரை 3 முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில், 4-வது மருத்துவ முகாம் அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை நடக்கிறது. இந்த முகாமில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பியல், இதயம், நரம்பியல், தோல், இஎன்டி, பல், மகப்பேறு மருத்துவம் உள்பட 17 துறைகள் சார்ந்த மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது.
இவை, சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு வழங்கப்பட உள்ளன. தவிர, முகாமிற்கு வரும் அனைவருக்கும் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சர்க்கரை, சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும்.
பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்ரே, எக்கோகார்டியோகிராம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் (ம) மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.