கோவை, நவ. 21: கோவை டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நேற்று நடந்தது. இதனை மாநகர கல்வி அலுவலர் குணசேகரன் துவங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவராமன் வரவேற்றார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் மூர்த்தி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சல், பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில், எலும்பியல் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், கண் பரிசோதகர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். இவர்கள் பிறந்தது முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மாற்றுத்திறன் அளவீடுகள் மதிப்பீடு செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும், புதிய தேசிய அடையாள அட்டை பெறவும், இலவச பஸ்பாஸ், ரயில் பாஸ் பெறவும் பரிந்துரை செய்தனர். இந்த முகாமில் மொத்தம் 160 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 23 பேருக்கு புதிதாக தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. 18 பேருக்கு ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி தனித்துவமான அடையாள அட்டைகள் புதுப்பித்து தரப்பட்டன. 20 பேர் புதிய ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி தனித்துவ அட்டைகள் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.


