கோவை, ஆக. 21: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், சிறு பண்ணைகள், வயல்களில் விவசாயம் தொடர்பான பணிகளை இயந்திரமயமாக்கல் குறித்த அதிக விழிப்புணர்வை ஊக்குவிக்க மற்றும் பயிற்சிளிக்க, வி.எஸ்.டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது. இதில், பல்கலையின் துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டனி செருகாரா ைகயெழுத்திட்டனர். இதன் மூலம், சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன பண்ணை தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மாணவர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் சிறு பண்ணை இயந்திரமயமாக்கல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப வி.எஸ்.டி-யின் பண்ணை இயந்திரங்களை பரிசோதித்தல் மற்றும் மதிப்பாய்வு செய்தல், தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சிகள் குறித்து ஆராய்ச்சி, பண்ணை இயந்திரமயமாக்கல் துறையில் வேளாண் மாணவர்களுக்கு செயல்திட்ட வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் நிறுவனத்தில் உள்ளக பயிற்சிகளை வழங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது. ஒப்பந்தத்தின் போது பல்கலையின் டீன் ரவிவாஜ், துறைத்தலைவர் கவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.