மதுக்கரை, செப். 17: கோவை அருகே மதுக்கரையில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றிய போயர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான மயானம் கோவை, பாலக்காடு சாலையில் குவாரி ஆபீஸ் பகுதியில் உள்ளது. இந்நிலையில், சிமெண்ட் தொழிற்சாலையை வேறொரு நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இதையடுத்து, மயானத்தை பயன்படுத்த தனியார் நிறுவனம் அனுமதி மறுத்து வந்தது. இந்நிலையில், குரும்பபாளையம் ரோட்டிலுள்ள மலைசாமி கோயில் வீதியில் வசித்த 105 வயதான ராமாயி என்கிற மூதாட்டி, வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து அவரது உறவினர்கள், அவரது உடலை அடக்கம் செய்ய பழைய மயானத்திற்கு எடுத்து சென்றனர். அப்போது, இங்கு அடக்கம் செய்யக்கூடாது என தனியார் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்து மதுக்கரை தாசில்தார் வேல்முருகன் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இறந்து போன மூதாட்டியை பழைய மயானத்தில் அடக்கம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.