கோவை,டிச.15: கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவில் கடந்த 12ம் தேதி இரவில் 3 பேர் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிந்தனர். இதனைப்பார்த்த பெண் ஒருவர், வேலைக்கு சென்றிருந்த தனது கணவருக்கு போன் செய்து தெரிவித்தார். அவர் அங்கு வந்து பார்த்தபோது, பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் அங்கும், இங்கும் தெருவில் சுற்றி கொண்டிருந்தனர். இதுகுறித்து ரோந்து போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் 3 பேரும் தப்பி செல்ல முயன்றனர்.
போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரிக்கையில், அவர்கள் முன் விரோதத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை தாக்கும் நோக்கத்தில் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கவுண்டம்பாளையம் காந்திநகரை சேர்ந்த மணிபாரதி(31), வேலாண்டிபாளையம் ஜவஹர் புரத்தை சேர்ந்த ஆனந்த்குமார்(27), மதுரையை சேர்ந்த ஸ்டீபன் ஹென்னி(23) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


