கோவை, ஆக. 15: தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்னையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜோதிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, அமைதியான முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்திருப்பது மனித உரிமை மீறல் எனவும், தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.