கோவை, ஆக.15: வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர். பீகார் உள்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். கடந்த 2024 மக்களவை தேர்தலில் பல தொகுதிகளில் இதேபோன்று மோசடி நடந்துள்ளதாக அவர் புகார் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேட்டை கண்டித்து கோவையில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி, ஊர்வலம் நடந்தது. ரயில் நிலையம் எதிரே கீதா ஹால் ரோட்டில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் வரை சென்றது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நிர்வாகிகள் தமிழ்செல்வன், கோவை போஸ், காந்தகுமார், கோட்டை செல்லப்பா, கோட்டை ஜேம்ஸ், நந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.