கோவை, அக். 14: கோவை மாநகராட்சி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘’தூய்மை பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்’’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதுபற்றி கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், குடிநீர் விநியோக பணியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்று வரை போனஸ் வழங்குவதற்கான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தினக்கூலி தொழிலாளர்களுக்கும் உடனே போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.