கோவை, நவ. 13: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்த குரங்கினை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குரங்கு ஒன்று நேற்று உணவு தேடி புகுந்தது. பின்னர், கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள சிறுதானிய உணவகம் என்ற மகளிர் உணவக பகுதிக்குள் நுழைந்த அந்த குரங்கு, அங்கு உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மூதாட்டியின் தட்டில் இருந்த சாப்பாத்தியை பிடுங்கி தின்றது.
தொடர்ந்து, அங்கிருந்த குப்பைகளில் இருந்த உணவை தின்றது. அப்போது, அதன் அருகே சென்ற ஊழியர்களை ஆக்ரோஷமாக முறைத்துக்கொண்டு உணவுப் பொருட்களை உண்டது. இந்நிலையில், அங்கு உணவு அருந்து வந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் குரங்கு உணவுப்பொருள்களை பிடுங்கி தின்றுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.
பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் குரங்கு நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் அட்டகாசம் செய்த குரங்கை பிடிக்க கூண்டு வைத்தனர். அந்த கூண்டினுள் கொய்யா பழங்களை வைத்து குரங்கை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்து அட்டகாசம் செய்த குரங்கால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
