கோவை, நவ. 12: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடக்கு மண்டலம் வார்டு எண் 18க்குட்பட்ட கவுண்டம்பாளையம், ராமசாமி நகர் பகுதியில் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடு மற்றும் தூய்மைப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம், தயாள் வீதி பிரதான சாலை பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள மண், கல் குவியல்களை உடனடியாக அகற்றிடவும் மற்றும் அப்பகுதியில் சேதமடைந்த தார் சாலையினை உடனடியாக சீரமைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம், மாணிக்க வாசகர் நகர் பகுதியில் தூய்மை பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். உடன் மாநகர நல அலுவலர் மரு. மோகன், உதவி நகர் நல அலுவலர் மரு. பூபதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
