மேட்டுப்பாளையம், நவ.12: டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே கோவை எஸ்.பி கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும்படி வந்த இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி முழுவதுமாக சோதனை செய்த பின்னரே அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், வாகனங்களின் ஆர்சி புத்தகம், ஓட்டுநர் உரிமம், வாகனங்களில் ஏதாவது சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதும் உள்ளதா? என விடிய விடிய அதிரடி சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது, நள்ளிரவு வேளையில் தேவையில்லாமல் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த இளைஞர்களை பிடித்த போலீசார் எஸ்பி முன்னிலையில் நிறுத்தினர். அப்போது, எஸ்பி கார்த்திகேயன் தேவையில்லாமல் இரவு வேளையில் சுற்றி திரிந்த இளைஞர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் இரவு வேளையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
