கோவை,அக்.10:கோவையில் நடந்த நிகழ்ச்சியில் 741 தமிழ் எழுத்துகளுடன் வரையப்பட்ட முதல்வர் உருவப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேஷ்(30). தமிழ் எழுத்து ஓவியர். இவர் கடந்த 2021ம் ஆண்டு தமிழி எழுத்து,வட்டெழுத்து என கி.பி. 3ம் நூற்றாண்டில் இருந்து இன்றைய தமிழ் எழுத்துகள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துகளை கொண்டு திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்திருந்தார்.
இதனைப்பார்த்த முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓவியர் கணேசை பாராட்டியிருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது கணேஷ் 741 தமிழ் எழுத்துகளை கொண்டு முதல்வர் ஸ்டாலின் உருவப்படத்தை வரைந்துள்ளார். இதனை நேற்று குறிச்சி சிட்கோவில் நடந்த தங்க நகை தொழில் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில், கோயம்புத்தூர் அனைத்து தங்க நகை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் முதல்வருக்கு நினைவுப்பரிசாக வழங்கினர்.