கோவை, செப். 9: கோவை காட்டூர் போலீசார் காந்திபுரம் பஸ் நிலையம் அருகே ரோந்து சென்று கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் போலீசார் அவரை சோதனை செய்தனர். அதில் அவரிடம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில் பிடிப்பட்டவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த நஞ்புல் ஹக்யூ (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர் எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தார், யாருக்கு விற்பனை செய்ய வைத்திருந்தார்? அவருக்கு வேறு ஏதாவது கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.