கோவை, அக். 8: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். மின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், கோவை மண்டல அளவிலான காத்திருப்பு போராட்டம் டாடாபாத் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை மண்டல செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில், 300க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி மாற்றம் வழங்கிட வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு 1-12-2019ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
விடுபட்ட கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை பொது செயலாளர் சோமசுந்தரம், கோவை கிளைகள் செயலாளர் செபஸ்டியன், கோவை மாநகர், வடக்கு, தெற்கு, உடுமலை, திருப்பூர், பல்லடம், நீலகிரி ஆகிய கோவை பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.