கோவை, நவ. 7: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 41வது வார்டுக்கு உட்பட்ட மருதமலை சாலை, பி.என்.புதூர் பகுதியில் புனரமைக்கப்பட்ட வரிவசூல் மையம் மற்றும் சுகாதார அலுவலக கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. இவற்றை, மேயர் ரங்கநாயகி திறந்துவைத்தார். பின்னர், குத்துவிளக்கு ஏற்றினார். இதன்பிறகு, வரிவசூல் மையத்தில் மாநகராட்சியின் 41வது வார்டு பகுதிகளுக்கான வரிவசூல் பணியினை துவக்கிவைத்து, பார்வையிட்டார்.
வடக்கு மண்டலம் 14வது வார்டுக்கு உட்பட்ட ஆதித்யா ரெசிடென்சி, ஸ்ரீமுருகன் நகர், சிவா கேஸ்டில், பாலாஜி நகர், தேவி ரெசிடென்சி, அமிர்தலட்சுமி கார்டன் மற்றும் பி.எம்.பி. ரெசிடென்சி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதி 2025-2026ன்கீழ் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவுற்ற இடங்களில் தார்ச்சாலை அமைக்கும் பணியை துவக்கிவைத்தார்.நிகழ்ச்சியில், மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை, உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி பொறியாளர் நித்யா, சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சலைத், ரமேஷ், சரண்பாண்டி, சரண்யா, கவுன்சிலர்கள் சாந்தி, சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.
