மதுக்கரை, நவ. 7: மதுக்கரை அருகே மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஆற்று வீதியை சேர்ந்த ஹரி நாராயணன் என்பவரின் மகன் சைலேஷ் விஸ்வநாதன் (20). கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்- 2 பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் சூரிய நாராயணன் (20).
இருவரும் மதுக்கரை மைல்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் தன்னுடன் படிக்கும் விஜய் என்பவரின் பைக்கை ஓட்டி பார்க்கிறேன் என்று கேட்டதால், விஜய் பைக்கை கொடுத்துள்ளார். பைக்கை சைலேஷ் விஸ்வநாதன் ஓட்ட, சூரிய நாராயணன் பின்னால் அமர்ந்துள்ளார். கோவை- பாலக்காடு ரோட்டில் பைக்கை சைலேஷ் விஸ்வநாதன் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
அந்த பைக், மதுக்கரை மிலிட்டரி கேம்ப் அருகே, சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் வேகமாக மோதியது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது, உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
