கோவை, நவ.7: கோவை இருகூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நேற்றிரவு நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒருவர் இளம்பெண்ணை தாக்கி காரில் ஏற்றி கடத்தி சென்றார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, இருகூர் பகுதியில் காரில் இளம் பெண்ணை கடத்தி செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பகுதியில் காரை தேடினர்.
ஆனால், கார் கிடைக்கவில்லை. பின்னர், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது வெள்ளை நிற காரில் இளம்பெண்ணை ஏற்றிக்கொண்டு வேகமாக கார் சென்றது தெரியவந்தது. ஏற்கனவே, கோவை விமான நிலையம் பின்புறம் காரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இளம்பெண் காரில் கடத்தப்பட்டதாக வந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
