கோவை, நவ.6: போதை பொருள் கடத்தல் வழக்கில் கேரளா வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை போதைப்பொருள் நுண்ணறிவு போலீசாருக்கு கடந்த 22-8-2022-ம் ஆண்டு, கோவை ரயில் நிலையத்திற்கு வாலிபர் ஒருவர் போதைப்பொருளை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருடன் இணைந்து ரயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகளை கண்காணித்தனர். அப்போது 1-வது பிளாட்பாரத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, அவர் கொண்டு வந்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போதை பொருள் நுண்ணறிவு போலீசார் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரை சேர்ந்த ரெஜிஸ் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி விசாரணையில், ரெஜிஸ் கஞ்சா கடத்தி வந்தது நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ராஜவேல் தீர்ப்பளித்தார்.
