கோவை, அக்.4: தமிழக முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே உள்ள மாநகராட்சி கூடைப்பந்து வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 76 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. 2வது நாளான நேற்று நடைபெற்ற மாணவிகளுக்கான பிரிவில், தூத்துக்குடி அணியும், திருவாரூர் அணியும் மோதியது.
இதில் 68 -19 என்ற புள்ளிக்கணக்கில் தூத்துக்குடி அணி வென்றது. தேனி அணிக்கும், நாமக்கல் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 52-21 என்ற புள்ளிக்கணக்கில் தேனி அணி வென்றது. திருவண்ணாமலை அணி 54-24 என்ற புள்ளி கணக்கில் திருப்பூர் அணியை வீழ்த்தியது. மாணவர்களுக்கான பிரிவில் சென்னை, ராமநாதபுரம் அணிகள் மோதியது. இதில் 101-41 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணி வென்றது. செங்கல்பட்டு அணி 68-66 என்ற புள்ளி கணக்கில் விழுப்புரம் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து இன்றும் போட்டிகள் நடக்கிறது.