Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருக்குறள் முற்றோதல் போட்டி: மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கோவை, செப்.23: திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ 15,000 பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2025-2026ம் ஆண்டிற்கு மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திருக்குறள் முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப்பெயர்கள் உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்பெறும். முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட திறனறிக்குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ்வளர்ச்சி இயக்குநருக்கு கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநரால் பரிந்துரை செய்யப்படும். ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது. விண்ணப்பங்களை கோவை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.