சூலூர், ஆக. 19: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பட்டணம் கிராமத்தில் அபிஷேக் என்பவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த சீனிவாசன் மகன் சிலம்பரசன் (40) என்பவர் கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று மதியம் வழக்கம் போல் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த சிலம்பரசன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி தரையில் அமர்ந்துள்ளார். தரையில் அமர்ந்த அவர் அப்படியே சுருண்டு கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ உதவியாளர்கள், சிலம்பரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement