கோவை, அக்.12: கோவை நகரில் சட்ட விரோத செயல்கள், திருட்டு, சட்டம் ஒழுங்கு பாதிப்புகளை தவிர்க்க கண்காணிப்பு பணி நடக்கிறது. தீபாவளியை முன்னிட்டு கடந்த காலங்களில் செயல்படாமல் சும்மா கிடந்த புறக்காவல் நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. நகரில் 70க்கும் மேற்பட்ட புறக்காவல் நிலையங்கள் இருக்கிறது. உக்கடம், கோட்டை மேடு, கரும்புக்கடை, போத்தனூர், செல்வபுரம், பூமார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் உள்ள புறக்காவலர் நிலையங்கள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது.
இங்கே தினமும் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணி நடத்த போலீசார் மற்றும் ஏரியா கண்காணிப்பு பணியில் உள்ளவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. பெரிய கடை வீதி, உக்கடம் உள்ளிட்ட சில புறக்காவல் நிலையங்களில் காலை, மாலை நேரங்களில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி கூட்ட நெரிசலை தடுக்க, இங்கே போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புறக்காவல் நிலையங்களில் இருந்த படி கூட்டத்தை மைக்கில் அறிவிப்பு வெளியிட்டு கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் புறக்காவல் நிலையங்களில் காண வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.