கோவை, அக். 12: தமிழ்நாடு கட்டிடம் மற்றும் மனை ஒழுங்குமுறை ஆணையம் சார்பில், கட்டிடம் மற்றும் மனை அபிவிருத்தி செய்யும் மேம்பாட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நேற்று நடந்தது. ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கி, விழிப்புணர்வு கையேடு வெளியிட்டார். ஆணைய உறுப்பினர்கள் சுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, ஜெகநாதன், சுகுமார் சிட்டி பாபு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ரியல் எஸ்டேட் திட்டங்களின் வீடு மற்றும் மனை வாங்கும்போது, வாங்குவோர்-விற்போர் இடையேயான பரிவர்த்தனையை ஒழுங்குபடுத்துவது குறித்தும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகள் குறித்தும் விளக்கப்பட்டது.
ரியல் எஸ்டேட் துறையில் ஒழுங்குமுறைகளை பின்பற்ற தமிழ்நாடு அரசு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை (TNRERA) அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் இதுவரை 31,179 திட்டங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக நமது நாட்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த திட்டங்களில் ரியல் எஸ்டேட் திட்டங்களின் பங்கு 21 சதவீதமாக உள்ளது எனவும் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கோவை மற்றும் மேற்கு மண்டலத்தை சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட மனை மற்றும் கட்டிட அபிவிருத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.