மேட்டுப்பாளையம், நவ.11: கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் மைய பகுதியாகவும், தமிழக, கேரள, கர்நாடக மாநில எல்லை பகுதியாகவும் மேட்டுப்பாளையம் இருந்து வருகிறது. இதேபோல் பணி நிமித்தமாகவும், பள்ளி கல்லூரி செல்வதற்காகவும் நாள்தோறும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பேருந்து நிலையத்தின் ஒருபுறம் மட்டுமே பயணிகள் நின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பேருந்து நிலையத்தில் பயணிகளின் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரிகள் பலர் கடைகளை அமைத்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் நடக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ‘தினகரன்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் நேற்று பேருந்து நிலையத்தில் பயணிகளின் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தினர். தற்போது நடைபாதை பயணிகள் நிற்பதற்கு விசாலமான இடமாக மாறி உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

