மேட்டுப்பாளையம், டிச.6: மேட்டுப்பாளையம் அருகே உலா வந்த ஒற்றை யானையை போ.. சாமி... போ என செல்லமாக பொது மக்கள் விரட்டியதும் கால்நடைகளையும், மனிதர்களையும் பிளிறியபடி எச்சரித்து விட்டு ஓடியதால் பரபரப்பு நிலவியது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல் செல்லும் வனச்சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. அப்போது, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு மீண்டும் அப்பகுதி மக்கள் அழைத்து வந்துள்ளனர். காட்டு யானையை கண்டதும் அப்பகுதி மக்கள் அச்சத்தில் போ சாமி...போ... என செல்லமாக விரட்டினர். அப்போது, அங்கு கால்நடைகளை அழைத்து வந்த மக்களையும்,கால்நடைகளையும் பிளிறியபடி அந்த ஒற்றை யானை எச்சரித்து விட்டு மீண்டும் வனப்பகுதியை நோக்கி ஓடிச்சென்றது. அதன் பின்னரே அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

