கரூர், ஆக, 30: கரூர் வாங்கல் சாலையோரம் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி பகுதியை தாண்டியதும், சாலையோரம் அதிகளவு கோழி கழிவுகள் மூட்டை மூட்டையாக இரவு நேரங்களில் கொட்டப்படுகிறது.
துர்நாற்றம் உட்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், இந்த கோழி கழிவுகளை முறைப்படி அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில், இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வாங்கல் சாலையோரம் கொட்டப்படுவதால் வாகன ஓட்டிகளும், இந்த பகுதியை சுற்றிலும் வசிக்கும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, வாங்கல் சாலையோரம் இரவு நேரங்களில் மட்டும் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.