கிருஷ்ணராயபுரம், செப்.27: கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்கலத்தில் அரசு கிளை நூலகம் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ சிவகாமசுந்தரி, நூலக உறுப்பினர் அட்டைகள் வழங்கினார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்கலத்தில் பள்ளிக்கல்வித்துறை பொது நூலகம் திட்ட நிதி மூலம் ரூ.22 லட்சம் மதிப்பில் அரசு கிளை நூலக முதல் தளத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு அதனை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
கிளை நூலகம் கூடுதல் கட்டிடம் திறப்பு விழாவில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, பள்ளி மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை,நோட்டு புத்தகம் மற்றும் எழுதுகோல் வழங்கினார். நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ரகுநாதன், உப்பிடமங்கலம் பேரூர் கழகச் செயலாளர் தங்கராஜ் , பேரூராட்சி திவ்யா தங்கராஜ், துணைத் தலைவர் பாக்கியலட்சுமி, கருப்பண்ணன், அரசு அலுவலர்கள்,கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.