கிருஷ்ணராயபுரம், ஆக. 22: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி ஊராட்சி லாலாபேட்டை பகுதியில் கள்ளபள்ளி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குறுக்கே புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இவ்வழியாக மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி ஊருக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இதில் புதிதாக பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் இவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவ்வழியே பள்ளிக்கூடங்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு சற்று சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆகையால் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.