கரூர், ஆக. 11: கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் நேற்றுமுன்தினம் அதிகபட்ச மழையாக 204.60 மிமீ மழை பெய்தது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் கரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்த காரணத்தினால் நேற்று குளிர்ச்சியாக காணப்பட்டது. தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ளது. இந்த நான்கு மாதங்களில் பெய்யும் மழைதான் ஆண்டின் சராசரி மழையை எட்ட உதவி வருகிறது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்தின் முதல் பாதியான ஜூன், ஜூலை மாதங்களில் கரூர் மாவட்டம் குறிப்பிடத்தக்க அளவு மழையை பெறவில்லை. இதற்கு மாறாக, மே மாத வெயில்போல வெயில் வாட்டி வதக்கியது.இந்த வெயில் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், கடந்த 2, 4 மற்றும் 6 மற்றும் 7ம்தேதிகளில் கரூர் மாவட்ட பகுதிகளில் 29.80 மிமீ, 78.80 மிமீ, 88.80மிமீ, 13,40 மிமீ என்ற அடிப்படையில் மழை பதிவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை கரூர் 53.60 மிமீ, அரவக்குறிச்சி 28.60 மிமீ, க.பரமத்தி 2 மிமீ, குளித்தலை 4.40 மிமீ, கிருஷ்ணராயபுரம் 40 மிமீ, மாயனூர் 16 மிமீ, பஞ்சப்பட்டி 32 மிமீ, கடவூர் 12 மிமீ, பாலவிடுதி 4 மிமீ, மயிலம்பட்டி 12 மிமீ என்ற அளவில் 204.60 மழை பதிவாகியிருந்தது.இந்த மாதத்தில் ஐந்தாவது முறையாக நேற்றுமுன்தினம் அதிகபட்ச மழையை கரூர் மாவட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.