லாலாப்பேட்டை, நவ. 7: லாலாப்பேட்டை அருகே விட்டுக்கட்டியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்த காலம் முடிந்து 2 மாதங்கள் ஆகியும் தார் சாலை போடாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே சிந்தலவாடி ஊராட்சி விட்டு கட்டி பழைய திருச்சி கரூர் இருந்து கீழ சிந்தலவாடியை இணைக்கும் 460 மீட்டர் தார்ச்சாலையானது சேதம் அடைந்து காணப்பட்டது. இச்சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.18 லட்சத்துடன் சிறு பாலத்துடன் சாலையை மேம்படுத்த கடந்த மார்ச் மாதம் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. பணிகளை செப்டம்பர் மாதம் 9ம் தேதிக்குள் முடிவுற்று ஒப்படைக்க வேண்டுமென காலக்கெடு நிர்ணயித்துள்ளனர். ஆனால் தற்போது கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தார்சாலை அமைக்க சிமெண்ட் கலவை கற்கள் கொட்டப்பட்டு உள்ளது.
ஜல்லி கற்கள் சிதறி காணப்படுவதால், இதில் வாகன ஓட்டிகள் சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பலகையில் பணிகள் செப்டம்பர் மாதமே முடிவுற்றதாக தகவல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இரண்டு மாத காலமாகியும் தார் சாலைகள் அமைக்கப்படாமல் காலம் தாழ்த்தி வரப்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
