கரூர், அக். 4: கரூரில் புகழ்பெற்ற புனித தெரசா ஆலயத்தின் 95ம் ஆண்டு தேர் திருவிழாவினை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு பிரதட்சணம் சாலையில் புனித தெரசா ஆலயம் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இவ் ஆலயத்தின் 95ம் ஆண்டு தேர் திருவிழா வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது. பங்குத் தந்தை லாரன்ஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் பங்கு மக்களும், பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து புனித தெரசாள் திருவுறுவம் பொறிக்கப்பட்ட கொடியினை ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனை தொடர்ந்து பங்குத் தந்தையர்கள் கொடிக்கு ஜெபம் செய்து கல் கொடிமரத்தில் ஏற்றி வைத்தனர். பங்கு மக்கள் வண்ண பலூன்களை பறக்க விட்டும், பட்டாசுகள் வெடித்தும், கைகளை தட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வரும் 12ம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது.