Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கரூரில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறி பூங்காவில் நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு

கரூர், நவ. 10: கரூரில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறி பூங்கா மூலமாக நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்பு கிடைக்கும் என்று அமைச்சர் கூறினர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கைத்தறி துணிநூல் அமைச்சர் காந்தி நேற்று கரூர் மாவட்டம் கோடாங்கிப்பட்டி மற்றும் காக்காவாடி பகுதிகளிலுள்ள தனியார் ஜவுளி பூங்காக்களில் நடைபெறும் கட்டுமானம் மற்றும் புணரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

கைத்தறி துணிநூல் அமைச்சர் காந்தி தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர்கள் மற்றும் ஜவுளித் துறையினருக்காக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கரூர் மாவட்டத்திலுள்ள நெசவாளர்கள் தொழிலை மேம்படுத்த 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் 10 சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் தலா ரூ.2.00 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கரூர் சரகத்தில் 43 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. சங்க உறுப்பினர்களை கொண்டு உள்ளூர் உற்பத்தி ரகங்களான பெட்ஷீட், தலையணை உறை, துண்டு, மற்றும் ஏற்றுமதி ரகங்களான எம்பிராய்டரி குஷன் கவர், பீச் மேட், குல்ட், பாய் மெத்தை, பை ஆகிய ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் ரூ.43.00 லட்சம் வரையிலான ரகங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் அவ்வப்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வழங்கும் குறியீட்டின்படி ஏற்றுமதி ரகங்களான மேட், ரன்ன ஆகியவை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும் சிறப்பு திட்டங்களுக்கான ரகங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் உள்ள எம்.எம்.76 கரூர் தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 6825 சதுர அடிபரப்பளவில் அமைந்துள்ள தொழிற்கூடத்தில் 100 தறிகள் கொண்ட சிறிய அளவிலான கைத்தறிபூங்கா அமைக்கதிட்டமிடப்பட்டு, இதில் முதல் கட்டமாக 40 தறிகள் மற்றும் எலக்ட்ரானிக் ஜக்கார்டு மெஷின், மோட்டரைஸ்டு வார்ப்பிங் மெஷின் உள்ளிட்ட கூடுதல் உபகரணங்கள் நிறுவி ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிறது. ரூ.600 முதல் ரூ.700 வரை தினசரி கூலி பெறும் வகையில் சந்தையில் அதிக வரவேற்புள்ள வீட்டு உபயோக துணி ரகங்கள், உலகத்தரம் வாய்ந்த மேட் உள்ளிட்ட ஏற்றுமதி இரகங்கள் உற்பத்திசெய்யப்படுகிறது.

கரூர் சரகத்தை பொறுத்தவரை வீட்டு உபயோக துணி ரகங்கள், மதிப்பு கூடிய மற்றும் ஏற்றுமதி ரக மேட் ரகங்களுக்கு சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. மேலும் தற்போதைய சந்தை நிலவரப்படி கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட சர்டிங் ரகங்களுக்கும் தேவை அதிகரித்துள்ளது. முதற்கட்டமாக நிறுவப்படும் 40 கைத்தறிகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 60 நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பும் நிலையான வருமானமும் வழங்குவது உறுதிசெய்யப்படும். இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 60 கைத்தறிகள் இப்பூங்கா அமைவிடத்திற்கு அருகிலேயே வாடகை தொழிற்கூடத்தில் நிறுவி செயல்பட உத்தேசிக்கபட்டுள்ளது. முதற்கட்ட செயல்பாடுகளின் அடிப்படையில் இப்பூங்காவின் மூலம் தறி ஒன்றிற்கு சராசரியாக 8 மீட்டர் வீதம் மாதம் ஒன்றிற்கு 8,000 மீட்டர், ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியிலுள்ள ஒயசீஸ் ஜவுளி பூங்காவில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும், புலியூர் காளிபாளையத்தில்  ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை அரைக்கும் பணியினையும், காக்காவாடியிலுள்ள விஎம்டிஜவுளி பூங்கா கட்டுமானப் பணிகளையும் மற்றும்  ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை அரைத்து அதில் நூல் உற்பத்தி செய்து அதன் மூலம் தயார் செய்யப்படுவதையும் அமைச்சர் செந்தில்பாலாஜி, கைத்தறி துணிநூல் அமைச்சர் திரு.ஆர்.காந்தி பார்வையிட்டதனர். தொடர்ந்து கரூர் வேலுச்சாமி புரத்தில் கரூர் தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் அமைக்கப்படவுள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்காவிற்கான இடத்தினையும், தியாகி குமரன் கைத்தறி நெசவாளர் கடன் கூட்டுறவு சங்கத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஏற்றுமதி ரகங்களையும் கைத்தறி துணிநூல் அமைச்சர் காந்தி பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் அரசு செயலர் (கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறை) திருமதி. வே.அமுதவல்லி. ஜவுளித்துறை இயக்குனர் திருமதி.இரா.லலிதா, கலெக்டர் தங்கவேல், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.