Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டு கரூர் மாவட்டத்தில் இதுவரை 3,518 விவசாயிகள் சம்பா பயிருக்கு காப்பீடு

கரூர், நவ.15: கரூர் மாவட்டத்தில் இதுவரை 3518 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர் காப்பீடு பதிவு செய்ய இன்றே கடைசி நாளாகும் இதனால் இது வரை காப்பீடு செய்யாத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறும்படி விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துருந்தார்.

கரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் 2016 பருவம் முதல் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சிறப்பு பருவம் நடப்பு ஆண்டில் நெல், மக்காச்சோளம் பயிர்களும், ராபி பருவம் நடப்பு ஆண்டிற்கான நிலக்கடலை, சோளம் கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ், பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமியத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதினை காப்பீடு செய்யும் இடங்களான பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் இருந்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

சிறப்பு பருவ பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் வேளாண் பயிர்களை பொறுத்தவரையில் சம்பா நெல் பயிர் ஒரு ஏக்கருக்கு ரூ.570.57 மக்காச்சோளம் பயிர் ஒரு ஏக்கருக்கு ரூ. 474.24 காப்பீட்டு கட்டணமாக செலுத்தவேண்டும். ராபி பருவ பயிர் காப்பீடு தொகையில் சோளம் பயிர் ஒரு ஏக்கருக்கு ரூ. 107.94, நிலக்கடலை ரூ. 492.02, கரும்பு பயிர் ஒரு ஏக்கருக்கு ரூ.1304.16ம் காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதியாக சிறப்பு பருவத்தில் நெல் பயிருக்கு இன்று கடைசி நாளாகும். மக்காச்சோளம் பயிருக்கு 2025 டிச.2ம் தேதியும், ராபி பருவத்தில் சோளம் பயிருக்கு 2025 டிசம்பர்-16ம் தேதியும், நிலக்கடலை பயிருக்கு 2026 ஜன.31ம் தேதியும், கரும்பு பயிருக்கு 2026 மார்.31ம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும் பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி கடைசி தேதி வரை காத்திருக்காமல் நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்கு முன்கூட்டியே தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிரை காப்பீடு செய்வதற்காக காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, சம்பா பயிர் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறா விவசாயிகள் என அனைவரும் அறிவிக்கை செய்யப்பட்ட பயிரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ (இ சேவை மையங்கள்) தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் www.pmfby.gov.in நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல் விதைப்பு சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத்தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ- சேவை மையங்கள்) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையோ அல்லது திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகுமாறு விவசாய பெருங்குடி மக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண் அலுவலரையோ அல்லது வங்கி கிளைகளையோ அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கேட்டுக்கொள்கிறார்