Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 20ம் தேதி மாபெரும் தமிழ்கனவு நிகழ்ச்சி

கரூர், ஆக.12: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (11ம் தேதி) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தங்கவேல் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் 2022-23 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளில் 200 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ளது. நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடுஅரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் வருகிற 20.8.2025 அன்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பெருமிதங்களைப் பறைசாற்றும் வகையிலும், அதே நேரம் தாங்கள் புலமை பெற்ற துறை சார்ந்தும் ஆளுமைகள் பேருரை நிகழ்த்துகின்றனர். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஆளுமைகள், பல்துறை நிபுணர்கள் ஆகியோரின் ஊக்கமிகு உரை மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர்களுக்குத் தமிழ் மரபின் பெருமிதத்தை உணர்த்துவதாகவும் அமையும்.

‘தமிழ்ப் பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவர்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழ்களும் பரிசும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்படும். சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பும் மாணவர்களை பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளன என்று தங்கவேல் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி யுரேகா, வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பாலசக்திகங்காதரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.