வேலாயுதம்பாளையம், நவ.11: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மாபெரும் இலவசகண் பரிசோதனை முகாமில் 633 பேர் பயன்பெற்றனர்.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மற்றும் மதுரை அரவிந்த் மருத்துவமனை இணைந்து கரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் உதவியுடன் காகித ஆலையைச் சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி. பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், ந.புகழூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு உள்ளடங்கிய மக்களுக்காக இலவச கண் சிகிச்சை முகாமினை காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. இம்முகாமில் மொத்தம் 633 பேர் கண் பரிசோதனை செய்து பயன் பெற்றனர்.
இந்த இலவச கண் பரிசோதனை முகாமினை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் (இயக்கம்), ராஜலிங்கம் மற்றும் மருத்துவக் குழுவினர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இம்முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை. வெள்ளெழுத்து,கண் விழித்திரையில் பார்வையிழப்பு (சர்க்கரை நோய் காரணமாக), பிறவி கண்புரை, கண்நீர் அழுத்த நோய், கண் எரிச்சல், கண் வலி, கண்ணின் கருவிழியில் புண். கண் பார்வை குறைபாடு. மற்றும் இதர கண் சம்பந்தமான நோய்கள் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டார்கள். மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ள 345 ஏழை எளிய மக்களுக்கு ரூ.93,000/- மதிப்பிலான மூக்கு கண்ணாடிகள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பாக இலவசமாக வழங்கப்பட்டது.இம்முகாமிற்கு கிராம பகுதிகளிலிருந்து கண் குறைபாடு உள்ளவர்களை அழைத்து வர ஆலை நிர்வாகம் புன்னம்சத்திரம், தளவாபாளையம், நொய்யல் குறுக்குசாலை, வேலாயுதம்பாளையம் மற்றும் ஓனவாக்கல்மேடு ஆகிய ஐந்து வழித்தடங்களில் பேருந்து வசதியுடன் ஏற்பாடு செய்திருந்தது.
