திருவனந்தபுரம், ஆக. 27: கேரள மாநிலம் பாலக்காடு அருகே பூஜை நடத்தியும் பெண்ணுக்கு பிடித்த போய் போகவில்லை என்று கூறி கோயில் பூசாரியை உறவினர்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த பூசாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிற்றிலஞ்சேரி அருகே இரட்டக்குளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(54). இவரது உறவினரான ஒரு பெண்ணுக்கு சமீபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டது. இந்தப் பெண்ணுக்கு பேய் பிடித்து இருப்பதாக கருதிய குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள வீழுமலை கோயில் பூசாரி சுரேஷிடம் அழைத்துச் சென்றனர்.
அவரும் பேயை விரட்ட பூஜை செய்வதாக கூறினார். அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூஜை நடத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அந்தப் பெண்ணுக்கு நோய் குணமாகவில்லை. இதனால் கோபம் அடைந்த கிருஷ்ணன், அவரது மகன்களான ரெஜின்(24), விபின்(21), உறவினரான பரமன் (51) ஆகியோர் பூசாரி சுரேஷ் தங்கி இருந்த ஆசிரமத்திற்கு சென்று பேய் ஏன் போகவில்லை என்று கூறி தகராறு செய்தனர். அப்போது 4 பேரும் சேர்ந்து பூசாரியை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் ஆலத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே பூசாரியும், அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து தங்களை தாக்கியதாக கூறி கிருஷ்ணன் மற்றும் அவரது மகன்கள் இருவரும் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.