சுசீந்திரம்.நவ.19: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவை முன்னிட்டு தினமும் விதவிதமான வெள்ளி வாகனங்களில் உற்சவ மூர்த்தி பவனி நடைபெறும். இவற்றில் பல வாகனங்கள் சேதமடைந்து உள்ள நிலையில், மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்த கைலாசநாதர் வாகனம், கமல வாகனம், சேஷ வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், கருட வாகனம், பூத வாகனம் ஆகிய 7 வெள்ளி வாகனங்களையும் சீரமைக்க திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கைலாச பர்வத வாகனத்தை சுசீந்திரத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் உபயத்தின் மூலம் ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நேற்று முன்தினம் கோயிலில் துவங்கியது. கோயில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி புதுப்பிக்கும் பணியை துவக்கி வைத்தார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவப்பிரசாத் முன்னிலை வகித்தார். அரசு ஸ்தபதி மணிகண்ட ராஜா வெள்ளி வாகனத்தை புதுப்பிக்கும் பணியை தொடங்கினார். நிகழ்ச்சியில் கோயில் மேலாளர் ஆறுமுகம்தரன், கோயில் கணக்கர் கண்ணன் மற்றும் கோயில் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
+
Advertisement


