திருவனந்தபுரம், அக். 18: கேரளாவில் அடுத்த ஒரு வாரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம் உள்பட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் அடுத்த ஒரு வாரத்திற்கு கேரளா முழுவதும் பரவலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று வயநாடு, கோழிக்கோடு, எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு உள்பட 9 மாவட்டங்களுக்கும், நாளை (19ம் தேதி) திருவனந்தபுரம், பத்தனம்திட்டா உள்பட 7 மாவட்டங்களுக்கும், 20ம் தேதி வயநாடு, கண்ணூர் உள்பட 5 மாவட்டங்களுக்கும், 21ம் தேதி கோட்டயம், இடுக்கி உள்பட 6 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement

