கன்னியாகுமரி, நவ.12: கன்னியாகுமரி அருகே பாலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (63). இவர் மது அருந்தி விட்டு அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவது வழக்கமாம். இந்நிலையில், நேற்று முன்தினமும் மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மனைவி வீட்டின் மேல்தளத்தில் வசிக்கும் மகன் கந்தன் (36) வீட்டிற்கு சென்று இரவு தங்கி உள்ளார்.
இந்நிலையில், காலையில் எழுந்தவுடன் மனைவி கீழே சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது தங்கராஜ் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில், அது அறுந்து விழுந்து கிடந்துள்ளார். மகன் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்து கிடந்ததும் தெரியவந்தது. சம்பவம் குறித்து அவரது மகன் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து, தங்கராஜ் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
