கருங்கல், அக். 11: குமரி மாவட்டம் பரசேரி முதல் புதுக்கடை வரையிலான சாலையில், பல்வேறு இடங்களில் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் பல்வேறு இடங்களில் உள்ள வாய்க்கால் பாலங்கள் குறுகலாக காணப்பட்டதால், பழைய பாலங்களை உடைத்து விட்டு அந்த பகுதியில் அகலமாக புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. திக்கணங்கோட்டில் இருந்து கருங்கல் செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் பாலத்தை விரிவாக்கம் செய்து, புதிதாக அமைப்பதற்காக பழைய பாலம் உடைக்கப்பட்டது. மிக முக்கியமான சாலை என்பதால் ஒரு மாதத்தில் திக்கணங்கோடு பாலம் பணி முடிக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான பெரிய பைப் லைன், சாலைக்கு அடிப்பகுதியில் சென்ற நிலையில், அதை மாற்றுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து ராட்சத குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு, கால்வாயில் மண் அகற்றப்பட்டு, அடிப்பகுதியில் கான்கிரீட் போடப்பட்டு, அதன் மேல் ராட்சத கிரேன் உதவியுடன் ரெடிமேட் பெரிய ஹாலோ கான்கிரீட்கள் மூலம் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்தது.
அதை தொடர்ந்து மேல் பகுதியில் மண் நிரப்பும் பணிகள் முடிந்தது. இதையடுத்து நேற்று இரவு முதல் பைக், கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள், இந்த பாலம் வழியாக செல்ல நெடுஞ்சாலை துறையினர் அனுமதித்துள்ளனர். ஒரு நாள் இடைவெளி விட்டு கனரக வாகனங்கள் இந்த பாலம் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை தக்கலை உட்கோட்ட உதவி பொறியாளர் ரெஜ்வின் தெரிவித்துள்ளார்.