திருவனந்தபுரம், செப். 11: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே எம்டிஎம்ஏ போதைப்பொருளை விற்க முயற்சித்த டாக்டரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்ஜத் அஹ்சான் (33). உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா கால் சென்டர் செயல்பட்ட போது அங்கும் பணிபுரிந்தார். இந்தநிலையில் அம்ஜத் அஹ்சான் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார். இதை தொடர்ந்து ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை. இவர் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் கொச்சி புல்லேப்படி பகுதியில் போதைப்பொருள் விற்க முயற்சிப்பதாக கொச்சி மத்திய போலீசுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் 840 மிகி எம்டிஎம்ஏவுடன் டாக்டர் அம்ஜத் அஹ்சான் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
+
Advertisement