திருவனந்தபுரம், அக். 7: கேரளாவில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பெண்ணிடம் இருந்து 10 பவுன் நகை பறித்த இளைஞர் காங்கிரஸ் தலைவரை கோழிக்கோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஷெனீர் (28). நீலேஸ்வரம் மண்டல இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும், ஐஎன்டியூசி தலைவராகவும் உள்ளார். இந்தநிலையில் ஷெனீர் பேஸ்புக்கில் போலி கணக்கை தொடங்கி கோழிக்கோட்டை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அதன்படி 2 பேரும் செல்போனிலும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அந்த பெண்ணை இவர் திருமணம் செய்வதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தனக்கு ஒரு அவசர தேவை இருக்கிறது என்று கூறி அந்தப் பெண்ணிடம் இருந்து ஷெனீர் 10 பவுன் நகையை வாங்கி உள்ளார். ஒரு மாதத்தில் நகையை திருப்பித் தருவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் பல மாதங்கள் ஆன பிறகும் ஷெனீர் நகையை திருப்பிக் கொடுக்க வில்லை. மேலும் அவர் தன்னுடைய செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தப் பெண் சம்பவம் குறித்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நீலேஸ்வரத்தில் வைத்து ஷெனீரை கைது செய்தனர். முகம்மது ஷெனீர் இதற்கு முன்பு நீலேஸ்வரத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் ஏமாற்றி நகைகளை பறித்ததாக போலீசார் தெரிவித்தனர்.