குளச்சல், அக்.4:குளச்சல் அருகே தனியார் காப்பகத்தில் இருந்த சிறுவன் திடீரென மாயமானார். குளச்சல் அருகே உள்ள தனியார் காப்பகத்தில் பீகாரை சேர்ந்த 12 வயது சிறுவன் தங்கி இருந்தான். நேற்று முன்தினம் மதியம் உணவு சாப்பிட்டு விட்டு சென்ற சிறுவன், திடீரென காப்பகத்தில் இருந்து மாயம் ஆனான். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால், காப்பகத்தில் தங்கி இருந்த மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் மட்டும் தனிமையில் இருந்தான். இதை பயன்படுத்தி சிறுவன், மாயமாகி விட்டதாக காப்பக வார்டன் மணி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவனின் புகைப்படத்துடன் ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் தேடினர். ஆனால் சிறுவன் கிடைக்க வில்லை. இந்த சிறுவன் கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனின் தந்தை கூடங்குளத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு சிறுவன் மாயம் ஆனது குறித்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement