அருமனை, ஆக.3 : அருமனை அருகே கடையால் சந்திப்பில் உள்ள அரசு பள்ளியில் இருந்து சற்று தொலைவில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இப்பகுதியில் சாலைகள் குறுகியதாகவும், அதிகளவில் கடைகளும் உள்ளன. இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென மதுக்கடையின் முன் பகுதியில் வலை மற்றும் வெல்டிங் பிரேம் அடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதையறிந்த ஊர் பொதுமக்கள், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சில கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றுகூடி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கடையால் போலீசார் ஆக்ரமிப்பு செய்த சம்பந்தப்பட்ட மதுபான கடை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போலீசார் சாலையை ஆக்ரமித்து வைக்கப்பட்ட கிரில் கம்பிகளை அகற்றினர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பள்ளி மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ள இந்த மதுக்கடையினை வேறொரு இடத்துக்கு மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.