திங்கள்சந்தை, ஆக. 3: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நடந்த தவறுகளுக்கு நீதி கேட்டு, குமரி மாவட்ட லெனினிஸ்ட் செங்கொடி கட்சி சார்பில் திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் லாயம் சுசீலா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பால்ராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொல்லங்கோடு நகர செயலாளர் துரைராஜ் ஆதரித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தர்மஸ்தலாவில் நடந்த விசாரணையில், அங்கு மனித எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஞ்சுநாதர் கோயிலுக்கு சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. மன்னர்கள் கொடுத்த பல ஆயிரம் கோடி நிலத்தை தனி நபர்கள் அனுபவித்து வருகின்றனர். தற்போது விரேந்திர ஹெக்டே என்பவர் கோயிலை நிர்வகித்து வருகிறார்.
இவர் தற்போது மாநிலங்களவையின் பாஜக எம்பி ஆவார். எனவே இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உச்சநீதிமன்றம் அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும் என வலியுறுத்தி பேசினர். இதில் மேரி ஸ்டெல்லா, இசக்கிமுத்து, முத்துகிருஷ்ணன், பெனில், வசந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.