கிள்ளியூர் பேரூராட்சியில் அறுந்து விழுந்த மின்கம்பியை சீரமைக்க தாமதம் தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி
கருங்கல், ஜூலை 30 : கருங்கல் அருகே வேங்கோடு ஆயினிவிளையிலிருந்து வெட்டுவிளை செல்லும் சாலையில் ஆயினிவிளை ஏலா பகுதி வழியாக மின் பாதை செல்கிறது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பாதையில் மின் கம்பி அறுந்து ரோட்டில் விழுந்துள்ளது. சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்தது சம்மந்தமாக கிள்ளியூர் பேரூராட்சி கவுன்சிலர் சுனில் மற்றும் கிள்ளியூர் பேரூராட்சி துணை தலைவர் சத்தியராஜ் ஆகியோர் கிள்ளியூர் மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர். இருந்தாலும் பல நாட்களாக அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்து மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் வழங்கவில்லை. மின் கம்பத்திலிருந்து வரும் மின்சாரத்தை மட்டும் நிறுத்தி உள்ளனர். இதனால் ஆயினிவிளை ஏலா பகுதியில் உள்ள மின் கம்பங்களில் கிள்ளியூர் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் மின்சாரம் இல்லாமல் எரியாமல் உள்ளது. உடனடியாக மின் கம்பத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட மின் கம்பிகளை சரி செய்து மின்சார இணைப்பை வழங்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.