நாகர்கோவில், ஜூலை 29: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி நாகர்கோவிலில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கன்னியாகுமரி கடல் பகுதியில் கடற்கரையில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் 27 ஆயிரம் சதுர கி.மீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆய்வு மற்றும் உற்பத்தி கிணறுகள் அமைக்க சர்வதேச அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்பகுதியில்தான் மீன் வள களஞ்சியமான வெட்ஜ் பேங்க் 10 ஆயிரம் சதுர கி.மீ பரப்பில் வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட மீன் வகைகளும், 60 க்கு மேற்பட்ட கடல் உயிரினங்களும் வாழ்கின்றன. தென் மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் இதை நம்பியே உள்ளது. இத்திட்டம் சூழியலை முற்றிலும் அழித்துவிடும். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட தாமஸ் கொச்சேரி மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரவி ரமேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாகவும், அதனை விளக்கியும் நிர்வாகிகள் பேசினர்.
+
Advertisement