ஈத்தாமொழி, ஆக. 18: ஈத்தாமொழி அடுத்த தெற்கு சூரங்குடியில் ஜவகர் கிராம அபிவிருத்தி சங்க ஆண்டு விழாவும், சுதந்திர தின விழாவும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கொய்யன்விளை நாராயணசாமி கோயில் முன்பு இருந்து தெற்கு சூரங்குடி தபால் நிலையம் வரை காளைவண்டி போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து தட்டு வண்டிகளும், வில் வண்டிகளும் கொண்டு வரப்பட்டன.
இப்போட்டியினை நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மீனாதேவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மொத்தம் 28 தட்டு வண்டிகளும், 8 வில் வண்டிகளும் பங்கேற்றன. போட்டியில் எள்ளுவிளையைச் சேர்ந்த அய்யாதுணை தட்டுவண்டி முதல் பரிசையும்,செண்பகராமன்புதூரை சேர்ந்த தாணப்பன் தட்டுவண்டி 2 -வது பரிசையும், நல்லூரை சேர்ந்த மேலத்திரட்டு சுடலைமாட சாமி தட்டு வண்டி 3-வது பரிசையும், ஆவரைகுளம் ஓம் என்ற தட்டுவண்டி 4வது பரிசையும் பெற்றது. வில்வண்டி போட்டியில் ஓம் அவரைகுளம் ஏ என்ற வில்வண்டி முதல் பரிசையும், ஓம் அவரைகுளம் பி என்ற வில்வண்டி இரண்டாம் பரிசையும் பெற்றது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து தட்டுவண்டி மற்றும் வில் வண்டிகளுக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது.